Posts Tagged ‘rain’

எப்பொழுதும் மழைக்காலம் …

சில கதைகளை ஆரம்பிக்கும் உரிமை மட்டுமே எழுதுபவனுக்கு இருக்கிறது. பின் கதை தன் போக்கில் எழுதுபவனையும் , காலத்தையும் நகர்த்திக் கொண்டு போய் விடுகிறது. தனக்கே தனக்காக எழுதும் பொழுது மட்டுமே இது சாத்தியம். இந்தக் கதை எழுதி முடிக்க மூணரை வருடங்கள் அதிகமா என்றெல்லாம் தெரியவில்லை. இந்த கதை என் மனதிற்கு நெருக்கமானது என்பது மட்டும் உண்மை. இந்த பயணம் எனக்குப் பிடித்திருக்கிறது.

மற்றபடி இந்த கதைக்கான கரு எப்படித் தோன்றியது , இதை எப்படிப் படிக்க வேண்டும் , எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோனார் தெளிவுரை போட்டு திட்டு வாங்க விருப்பம் இல்லை :-)

படித்து விட்டு சொல்லுங்கள் ….

 

பிரிதல்

ஊடல்

கூடல்

இரங்கல்

இருத்தல்    

 

—————————————————————————-

Tags: , , ,

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.

நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன்.  ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.

அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன.  அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.

காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது.  பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது.  சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.

அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத்  தயங்காமல் இருந்தாள்.

மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள்,  கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட  தீண்டல்கள்.

காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது.  இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.

அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன். Read the rest of this entry »

Tags: , , , ,

நெய்தல்  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

 

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . சாலைகளை நனைக்கும் முன்பே  பாதியைப் பிடித்து  வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் , தான் நனைந்தது போக மீதியை,  சொட்டுச் சொட்டாக வீட்டிற்குள் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தன அந்தச் சிவந்த ஓடுகள் .  தரை முழுவதும் வழி தேடிப் பரவி , வாயில் காண முடியாமல் , மண்ணைச்  சேர முடியாமல் மேலும் அழுது வீடு முழுவதும் ஈரம் பூக்கச் செய்து கொண்டிருந்தது துயரம் கொண்ட மழை . வயோதிகர்கள் என்பதாலேயோ என்னவோ அவர்கள் இருந்த படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவேயில்லை மழை, மேலிருந்து  கீழாகவோ இல்லை கீழிருந்தும் கீழாகவோ . குளிராலேயோ மெத்தைப் பஞ்சின் கனத்தாலேயோ  மெலிதாகக் கால்கள் ஆடிக்கொண்டிருந்த கட்டிலில் , கழுத்தின் மேற்பகுதி மட்டும் தெரியும் வண்ணம் கம்பளிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள் அவள் .

 

முகத்தின் சுருக்கங்கள் வழி மெல்லப் புகுந்து அவள் சருமத்தை மேலும் உலர வைத்துக் கொண்டிருந்தது குளிர் . மூடியிருந்த இமைகளின் கீழ் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தன அவள் விழிகள் . சருகு போர்த்தியிருந்த உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன . ஒருமுறை இருமினாள் .

 

                 ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தவன் இருமல் சத்தம் கேட்டு , மீதி ஓவியத்தை தூரிகையிலேயே விட்டு அதை வண்ணங்களில் மூழ்கடித்து விட்டு அவள் அருகில் வந்தமர்ந்தான் . நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் . முன்பை விட அதிகம் சுடுவதாய்ச் சொன்னதவன் உள்ளங்கை . கம்பளிக்குள் தேடி அவள் கைகளை எடுத்து தன்னிரு உள்ளங்கை உள்ளடக்கிய இடைவெளிகள் மொத்தமும் நிரப்பிக் கொண்டான் .

 

மிகவும் பிரயாசைப் பட்டு இதழ்கள் பிரித்து , ” இப்பொழுது கூட ஓவியமா ” என்றாள் .

 

எதுவும் பேசாமல் மௌனமாகப் புன்னகைத்தான் .

 

ஓவியம் காணும் ஆர்வம் கொண்டு படுக்கையிலிருந்து எழ முயன்றவள் , முடியாமல் போகவே பெருமூச்சோடு மீண்டும் படுக்கையில் சரிந்தாள் . அவள் மனம் புரிந்து கொண்டவனாய் ஓடிச் சென்று பாதி வரைந்திருந்த ஓவியத்தை பலகையோடு தூக்க முயன்று முடியாமல் வரைதாளை மட்டும் கிழித்துக் கொண்டு வந்தான் .

 

வண்ணத்துப் பூச்சிகள் வான் முழுவது நிறங்கள் சிந்திக் கொண்டிருக்க ,  உடல் தொட்டிருக்கும் பரவசத்தில் ஆடைகள் நெகிழ்ந்து  காற்றில் பறந்திருக்க , ஒரு கையில் புல்லாங்குழலுடன் மிதந்து கொண்டிருந்தாள் தேவதை ஒருத்தி . ஒரு சிறகு  பாதி மட்டுமே முளைத்திருந்தது . வாசமில்லா பல நீல நிறப் பூக்கள் ஏங்கிய படியிருந்தன அவள் இன்னொரு கை பார்த்து . தேவதையின் முகம் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவள் இதழ்களைக் கவின் செய்தாள். Read the rest of this entry »

Tags: , ,

 

 

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்

பின்னொரு  மாலையில்

மழை பெய்திருந்த பொழுது

நாங்கள்

பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

 

அணிந்திருந்த உடையோ

முதுகின் மேல் பை கொண்டிருக்கும்

பொருட்கள் பற்றிய கவலையோ

தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ 

இல்லை வேறெதோ ஒன்றோ 

மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது

Read the rest of this entry »

Tags: , ,