Posts Tagged ‘poem’

ஒன்பது மாத சொச்சம்

விடாது பெய்திருந்த மழையின்

மறுநாளில் கண்டெடுத்திருந்தார்கள்

அந்தக் களிமண்ணை …

 

எத்தனை முறை வேண்டுமானாலும்

எப்படி வேண்டுமானாலும்

எதற்கு வேண்டுமானாலும்

எதற்குள் வேண்டுமானாலும்

மாற்றிக்கொள்ள

மாறிக்கொள்ள முடிந்திருந்தால்

ஊரில் எல்லாருக்கும் அதைப் பிடித்திருந்தது …

 

தண்ணீரைப் போல என்றாலும் – அது

தண்ணீரல்ல களிமண் என

மறந்து போனார்கள் …

 

அதைக் கண்டெடுத்த குயவன்

அவன் பழக்கப்படி பானையாக்கலாம் என்றான் …

 

பக்கத்து வீட்டுக்காரர்கள் அதுதான் சரி என்றார்கள் …

 

ஊரின் உபாத்தியாயர்

அ னா ஆ வன்னா சொல்லிக்கொடுத்து

வேலைப்பாடுகள் கொண்ட கூஜா ஆக்கினால்

பட்டணத்திற்கு விற்கலாம் என்றார் ..

 

பக்கத்து வீட்டுக்காரகள் அதுதான் சரி என

பிரம்பெடுத்துத் தந்தார்கள் …

 

அந்தத் தெருவின் சாயமிடுபவன்

நிறப்பூச்சுப்பூச்சு செய்தால்

வெளிநாட்டில் மவுசு என்றான் …

 

பக்கத்து வீட்டுக்கார்கள் அது தான் சரி என

அதற்கு முன் விலைபோன

உறவினர்களின் பானைகள் பற்றிய கதைகளை

விடியும் வரை பேசியிருந்தனர் …

 

யார் விருப்பப்படியும் மாறிக்கொண்டே

இருக்க முடிந்ததால்

எதுவாகவும் ஆகமுடியவில்லை களிமண்ணால் …

களிமண்ணாகவே இருந்தது

கடைசி வரைக்கும் …

 

களைத்துப் போன எல்லாரும்

அதை என்ன செய்வதென்று தெரியாமல்

குப்பைத்தொட்டியில் போட முடிவு செய்தனர் ..

 

எல்லாரும் உறங்கிய நள்ளிரவில் ரகசியமாய்

பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ..

ஒரு முறையாவது வாய் திறந்து

அதற்கு என்ன வேண்டுமென பேசியிருந்தால்

அது களிமண்ணாகவே இல்லாமல்

இருந்திருக்கக் கூடுமென ….

 

—————————————————————————————-

Tags: ,

 

அறிமுகமில்லாத தெருக்கள்
நீண்டு கொண்டே செல்கின்றன
எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….

காற்றில் பறக்கும் இறகென 
அருகில் வருகிறாய்
விரல் தொடும் நேரத்தில் 
விலகி மிதக்கிறாய் ..

கண்களை மூடிக் கொண்டு
உன்னை நெருங்கிடப் பார்க்கிறேன் ..

நினைவுக்கு வர மறுக்கும் கனவென
பிம்பங்கள் அல்லாத
தடையங்கள் மட்டும் – நீ
வந்து போனதன் அடையாளமாய்
விழிகளுக்குள்  இருக்கின்றன …

யுகங்கள் தேடி – உனை
நெருங்கிடும் சமயங்களில்
கிடைத்தல் அல்ல
தேடல் சுகமென்கிறாய்
விரும்பித் தொலைக்கிறேன் …

எந்தத் திருப்பத்தில்
வெளிப்படப் போகிறாய் மீண்டும் நீ ….

Tags:

 

நான் களைத்திருக்கிறேன்

 

அதிகம் பயணித்திருக்கவில்லை
பயண நோக்கமே புரியாதிருக்கையில்
பயண தூரம் ஒரு பொருட்டல்ல
கணக்கு வைத்திருப்பதும்  ஒரு கணக்கல்ல

 

பாதி தூரம் இலக்கில்லாமல்
அலைந்திருந்திருக்கிறேன்
பாதைகள் மாறி மாறித் தொலைந்திருக்கிறேன்
ஆரம்பித்த இடைத்தையே சந்தித்துச்
சலித்திருக்கிறேன்

 

பாதிப் பொழுதுகளை உறங்கிக்
கழித்திருக்கிறேன்
அநேகநேரம் பேசியபடியே இருந்திருக்கிறேன்
கேட்பவர்கள் இருக்கிறார்களா என்பது
பற்றிய அக்கறையே இன்றி ..

கேட்பவர்கள் இல்லாமல் வார்த்தைகள்
செலவழிப்பது வீண் என்று
மௌனமாக மட்டுமே நகரும்
இந்நாட்கள் பார்கையில் புரிகிறது

இரவெல்லாம் தெருக்கள் தோறும்
குளிர்காற்றோடு
இதுகாறும் நான் பேசித் தீர்த்த
வறட்டு வார்த்தைகள் பெய்து
அதிகரிக்கின்றன
எனைச் சுற்றிலும் வெற்றிடங்களை ..

இன்னும் எத்தனை தூரம்
என்பது பற்றிய பிரக்ஞை
அகன்றாகிவிட்டது ..

ஏனெனில் என் பயணம் பற்றிய கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலிருக்கப்போவதில்லை
என்னிடமே இல்லையென்கையில்

நான் களைத்திருக்கிறேன்

இருந்தும்
எனக்கு முன்பு  பாதைகள் இருக்கும்வரை
எல்லைகள் பற்றிய எண்ணங்களின்றி
நான் பயணித்திருக்கப் போகிறேன் .

——————————————————————

 

 

 

 

 

Tags:

 

ஒரு பொம்மையென
எனைக் கைகளுக்குள்
ஒளித்துக்கொள்விளையாடித் தீர்த்துவிட்டு
கை கால் கண்கள் பிய்த்துத்
தூக்கி எறி

உன் ஸ்பரிசங்கள் பற்றிய
நினைவுகளுடன்
காலத்திற்கும் புன்னகைத்துக் கிடப்பேன்
உன்  பொம்மைகளின் குப்பைத் தொட்டியில்

 

Tags:

அழுது கொண்டிருந்தான்  ஆதாம்
இறைவன் காலடியில் …

என்னால் தானே இவ்வளவும் !

அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …

அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால்  அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?

என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் – இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு


விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.

ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர  ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .

ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை  ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று

முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்


இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.


என்ன சம்மதமா ?

முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்

கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.

Read the rest of this entry »

Tags:

 

கடவுளான பின்

 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு

 

சும்மாயிருக்க முடியுமா ..?

 

 

 

என்னென்ன கடமைகள்

 

என்னென்ன கவலைகள்

 

என்னென்ன சலுகைகள்

 

 

 

பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …

 

 

நான் வாங்கும் சம்பளம் போல

 

உடனே தீர்ந்து போனது

 

ஒட்டு மொத்தக் காகிதமும்

 

 

 

மிட்டாய் வாங்கித் தருவதாக

 

வாக்குறுதி தந்து

 

என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து

 

கிழித்த காகிதங்கள்

 

கணத்தில் காணாமல் போயின

 

 

 

இன்றைக்கு இது போதும்

 

கடவுள் வேலை கடினமானதோ

 

களைத்துப்போனதே பட்டியலுக்கே

 

கண்கள் கெஞ்ச

 

துவங்கலாம் வேலை நாளையிலிருந்து

 

தூங்கிப்போனேன்

 

—————————————

Read the rest of this entry »

Tags: , , ,

 

 

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்


எண்பத்தி ஒன்றவதாகத்


தேடிகொண்டிருக்கிறேன்


ஒரு பிச்சைக்காரனை


—————————


பரவாயில்லை அது


பிச்சைக்காரி என்ற போதிலும்


—————————


தலைகவசத்தை விட


தர்மமே தலை காக்குமாம்


வாகனம் வாங்கும் போது


கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம்


—————————–


அதனால்


என் இப்போதைய அவசரத் தேவை


தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம்


ஒரே பிச்சைப்பாத்திரம்.


 


விளம்பரமா கொடுக்கமுடியும்


தினசரிகளில் இதற்காக ..



கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன்

Read the rest of this entry »

Tags: , , ,

 

 

வெகுநாட்கள் வறுத்தெடுத்த வெயிலுக்குப்

பின்னொரு  மாலையில்

மழை பெய்திருந்த பொழுது

நாங்கள்

பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ளிருந்தோம்

 

அணிந்திருந்த உடையோ

முதுகின் மேல் பை கொண்டிருக்கும்

பொருட்கள் பற்றிய கவலையோ

தோல் காலணிகள் என்கிற ஜாக்கிரதை உணர்வோ 

இல்லை வேறெதோ ஒன்றோ 

மழையிலிருந்து விலகி இருக்கச் செய்திருந்தது

Read the rest of this entry »

Tags: , ,

 

 

தவறுதலாகக் கொட்டிவிட்ட 

தீக்குச்சிகளை

மீண்டும் அடுக்க நேர்கையில் எல்லாம்

பசைவாசம் ஆறாத குச்சிகளில் 

ஆங்காங்கே தோன்றி

இடறிவிடுகின்றன

பல்பக்குச்சிகளின் சுவடுகள் தேய்ந்து போன 

பாலகனின் விரல் ரேகைகள் . 

Tags: ,

 

அய்யாமாரே அம்மாமாரே

எல்லாந்த் தெரிஞ்ச ராசாமாரே

கொஞ்ச நேரம் நில்லுங்க …

எம்முன்னால இல்லாத

என்னாச அவரோட

கடைசியா நாம்பேசும்

இந்தப் புழுதி மேட்டுக் காதலோட 

மொத்தக் கதையும் கேட்டுப்புட்டு

எந்தப்பு இதில் என்னன்னு

எதாச்சும்  தெரிஞ்சதுன்னா

எங்கிட்ட  சொல்லுங்க ….

 

எல்லாப் பெண்டுக போலவே நானும்

எட்டுப்புள்ளிக் கோலம் போட்டும்

தாயமாடக் கோடு போட்டும்

ஒத்தக் காலில் நொண்டி ஆடி

கண்ணக் கட்டிப் பாண்டி பாடி

சந்தோசமாத் தான இருந்தேன் ..

 

எப்ப ஒன்னப் பாத்தேனோ

அப்பவே நான் தொலைஞ்சு போனேன்

உள்ளுக்குள்ள செவந்து போனேன் …

 

 

எங்கப்பனோட அழுக்குத் துணிக்கு

எஞ்சாமி உந்துணிய

புத்தி கெட்டுப் போன வண்ணான்

மாத்தி வந்து தந்து போனான் …

உடுப்ப நானும் கொடுக்கயில

உசிர சேத்துக் கொடுத்தேனே …

 

பசி மறந்தேன் பந்தியிலும்

தூக்கமில்லே ராசந்தியிலும்

நீர் மழிச்சுப் போட்ட மீசை

மறைச்சு வச்சேன் முந்தியில …

 

நீர் தொட்ட கத்தாலைக்கு

செம்பகப்பூ வாசமின்னேன்

என் வீட்டு எருமைச் சத்தம்

எசபோலத் தோண நின்னேன் …

 

உம்பாதம் பட்ட கரடுக்கெல்லாம்

கண்ணில் ஒத்தி முத்தம் தந்தேன்

நெரிஞ்சி முள்ளுப் பாத கூட

சொர்க்கம் போகும் பாதயின்னேன்

நீ போன பூக்குமின்னேன் …

 

ஒன்னப் போலத் தானடி நானும்

துளித் துளியா மாறுறேன் நாளும்

ஒடம்புக்கும் முடியல தலகாலு புரியல

ஒம்மொகந் தாண்டி வேறேதும் கண்ணுக்குத் தெரியல …

 

தண்ணியில நடக்க நெனைக்கறேன்

தரையில நான் மெதந்து கெடக்கறேன்

இடுப்புக் கச்சம் அவுந்ததறியாம

கடகண்ணியில் நடந்து திரியறேன்

கதிரருவா கையிலெடுத்து

வெரலறுத்து சிரிச்சு நிக்கறேன் …

 

ஒங்கழுத்துத் தாலி செய்ய

என்னுயிரு கயிராகும்

ஒன்நெத்திப் பொட்டு வைக்க

எங்கடைசி சொட்டு ரத்தமும் சாகும் …

 

கரும்புக் காட்டில் வச்சு

கண்ணப் பாத்துச் சொன்னீகளே

வெட்டிபோட்டக் கரும்போட

செத்துப்போச்சே ஒம்ம வார்த்தைகளும் …

 

வெதநெல்லு வாங்கியார

சந்தைக்கு நாம போகயில

விம்மீன்கள வெலைக்கு வாங்கி

வெளையாடத் தருவேன்னீக

 

வெதநெல்லும் வெளஞ்சிருச்சு

விம்மீனுக்கும் விடிஞ்சிருச்சு

என்னாசக் காட்டில் மட்டும்

புல்லு மொளச்சுப் போனதென்ன

வெளக்கு அணைஞ்சு போன பின்னும்

எண்ண மிதக்கும் பூச்சி இங்க …

 

சிங்கம் போல ஒரு புள்ள

தோள் மேல வருவாண்டி

பட்டுப் போல ஒரு பாப்பா

இடுப்போரம் இருப்பாடி

சொமந்த சொம போதுமடி

அதுக்கு மேல நா சொமப்பேன்

அடிநெஞ்சில் உன்னையும் சேத்து…

 

நம்ம பத்திக் காத்து கேட்டா

வரப்போர புல்லு எல்லாம்

வசனத்தோட கத சொல்லுமே

சொன்ன கத முடியுமுன்னே

கள எடுத்தது யார் குத்தம் …

 

ஆத்தங்கரைப் பிள்ளையாரே

அசையாம இருக்கீரே

பாற கூடக் கரஞ்சிருக்கும்

பாவி ஊத்தின தண்ணிக்கு

கம்மாத்தண்ணி வத்திப் போயும்

கருண காட்ட மனசில்லையே…

ஒன்னப் போல ஆக்கிடாத அவர …

 

எங்க அந்தி நேர முத்தத்துக்கெல்லாம்

நீர்மட்டும் தானே சாட்சி

பொய் சாட்சி சொல்லியாச்சும்

அத்த பொண்ணு அம்பிகையோ

அக்கா மக அஞ்சுகமோ

அவருக்கு கட்டி வச்சா

ஒங்கோயில் பாதையில

காலத்துக்கும் கல்லாயிருப்பேன்

 

அரளி வெத அரைக்கனுமின்னா

எனக்கடுத்தவளும் அதில் பங்கு கேப்பா..

 

அப்பனாத்தா தொங்கின கயத்துல

எந்தாலி தொங்கனுமா…

 

மக்க சனம் என்னடி சொல்லும்

கத கட்டி நம்மளக் கொல்லும் …

 

மொத்தக் குடும்பம் அழுகயில

தொலைஞ்சு போச்சு என்னழுகச் சத்தம்

புரிஞ்சுக்குவ நீ மட்டும் – நம்புது

என் புது மெட்டிச் சத்தம்

 

எத்தனையோ கியாபகங்கள
நெஞ்சுக் குழியில் பொதச்சுப்புட்டு
எல்ல தாண்டிப் போகப் போறேன்
என் நெனப்ப எல்லாம் விட்டுப்புட்டு …

மாசம் ஏழோ அது தாண்டி எட்டோ
திரும்பத் தானே போறேன் நானும்
மனசில் ஒன்ன சொமந்து போறேன்
வயத்தில் ஒன்ன சொமந்து நிப்பேன்

என்னோட முடியட்டும்
உனக்காச்சும் விடியட்டுமின்னு
பொட்டப்புள்ள பொறந்துச்சுன்னா
புத்தி சொல்லிப் பொத்தி வைப்பேன்
அடிநெஞ்சில் ஒன் நெனைப்பெரிக்க
ஆம்பிள்ளையா பொறந்துப்புட்டா
கொஞ்ச நேரம் அழுதுப் புட்டு
அய்யனாரே ஒம்பேர வப்பேன் …

 

 

 

Tags: , ,

Page 1 of 212