மறந்து போன முதல் கவிதை …
அவள் இல்லை என்பதை நினைக்கும் போது , அவள்
இழப்பை நான் உணரும் போது
துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் …
- பாப்லோ நெருடா
-
சந்தியா கொஞ்ச கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறாள் . என் உயிர் நீ .. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என போராடுவதற்கு எதுவுமில்லை . எல்லாம் முடிந்து விட்டது என்ற நிதர்சனம் மனம் பூராவும் பரவிக் கிடக்கிறது . துடித்துக் கொண்டிருக்கும் அவள் உடலைப் பார்க்கும் போது உயிர் போவதே பரவா இல்லை என எல்லாருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் .
மணி மூன்றடித்தது . இன்னமும் அவள் நினைவு திரும்பவில்லை .போவதற்கு முன் ஒரு முறையாவது கண்ணைத் திறந்து பார்க்க மாட்டாளா என தான் அவள் அருகிலேயே உட்கார்ந்திருக்கிறேன்.
நேற்று தான் இவளைப் பெண் பார்க்கச் சென்றது போல் இருக்கிறது .
பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது . யார் தான் வேண்டாம் என்பார்கள் இவளைப் போன்ற ஒருத்தியை . மிகவும் அமைதியாகவே என்னருகில் நின்றிருந்தாள் . கொஞ்ச நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் பால்கனியில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். தூரத்திலிருந்த கோவிலொன்றில் மணியடித்தது .
“என்னங்க எதுவுமே பேச மாட்டீங்களா நீங்க ??”
அவள் எவ்வளவு பேசுவாள் என்பது அப்பொழுது தெரியாமல் நான் கேட்டது . பைத்தியக்காரி . விட்டால் இரவு முழுவதும் கூட பேசிக் கொண்டேயிருப்பாள் . விரும்பிய இசை கூட சலித்துப்போகும் ஒரு காலத்திற்கு பிறகு . கொஞ்சம் கூட பொருள் , நோக்கம் எதுவுமில்லாமல் அவள் பேசுவது இன்றும் கூட சலித்ததே இல்லை .
” ஹேய் பைத்தியக்காரி , ஒரே ஒரு முறை என்னைப் பார்த்து பேசேன் இப்பொழுது “
எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன் மெதுவாக . நிச்சயம் அவளுக்கு இது கேட்டிருக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கண்திறந்து என்னைப் பார்க்கத் தான் போகிறாள்.அவள் முகத்தைப் பார்த்தேன் . கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் இருக்கிறாள் . அன்றும் கூட இதே போல் தான் இருந்தாள்.
“ஏதாவது பேசலாமே .. அதுக்கு தான பெரியவங்க தனியா அனுப்பிருக்காங்க . “
மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.மீண்டும் கொஞ்ச நேரம் மௌனம் .
“சரிங்க , நாம நெறைய பேசிட்டோம்ன்னு நெனைக்கறேன் .. அப்போ கீழ போகலாமா ” என இரண்டடி எடுத்து வைத்தேன் .
ம்ம்ஹீம் .. என வேகமாக மறுத்து தலையசைத்தாள். அந்த வெட்கம் கலந்த முகம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது . நின்று அவளையே பார்த்தேன் .


