வெண்ணிலா … 9
9
“Some of us think holding on makes us strong; but sometimes it is letting go.”
- Herman Hesse
பத்து நாட்களில் என்ன நடந்து விட முடியும். என்ன வேண்டுமானாலும் நடந்து விட முடியும். எனக்கு நடந்தது போல.
பகலிலேயே நான் கனவுகள் கண்டு கொண்டிருந்த காலம் இது. வந்தனாவை அன்று சந்தித்திருந்ததும் ஒரு பகல் கனவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
ஆனால் அது கனவில்லை.
வெயில் நேரத்து மழை போல, என்றோ சிறு வயதில் ஒரு மாலை நேரத்தில் தலையில் நச் நச்சென்று குட்டிப் பெய்த ஆலங்கட்டி போல , சிறுவர் மலரில் நான் படித்த ஒரு தேவதைக் கதை போல நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அவள் என் முன் நிஜமாகவே நின்று கொண்டிருந்தாள்.
நான் ஊமை மொழி பழகிக் கொண்டிருந்தேன். வெண்ணிலா தான் எனை அசைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள். அதற்குள் என் அலுவலகத் தளம் வந்திருந்தது.
வந்தனாவும் எங்களுடன் இறங்கிக் கொண்டாள்.
“ஹலோ .. ” மூன்றாவது முறையாக அவள் சொன்னாள்.
“ஹாய் “ என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“ஹலோ என்ன நடக்குது இங்க ..? ” வெண்ணிலா இடையே புகுந்தாள்.
“வெண்ணிலா .. இவ.. இவங்க வந்தனா .. என் காலேஜ் மேட் .. ”
“என்னப்பா மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு .. ” சொல்லிக்கொண்டே வெண்ணிலாவிற்குக் கை கொடுத்தாள்.
“ஹாய் ஐ’ம் வெண்ணிலா .. ” வந்தனா இவள் யார் என்பது போல் என்னைப் பார்த்தாள். வெண்ணிலாவும் நீயே சொல்லேன் பார்ப்போம், என்பது போல என்னைப் பார்த்தாள். எனக்கு எங்கே பார்ப்பதென்று தெரியவில்லை. மனதிற்குள் நூறு முறை தோன்றியது , சொல்லடா இவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று. வார்த்தைகள் தான் ஒத்துழைக்கவில்லை.
பேசியிருக்க வேண்டிய இடம் அது. நான் பேசவில்லை.









