
எனக்கும் தேரைகளுக்குமான உறவு இருபது வருடக் காலச்சக்கரத்தின் பற்களில் குருதி தோய்ந்த மசி எனப் படிந்திருக்கிறது . ஒரு நண்பனை வஞ்சிக்கையில் ஏற்படுகின்ற சுகம் , எதிரி ஒருவனின் இறந்து போன உடலை ரத்தம் சிதறச் சிதற துண்டு துண்டாக வெட்டுகையில் ஏற்படும் உச்சம் ,நீண்ட நாள் கழித்து கணவனுடன் பார்க்கும் முன்னாள் காதலியின் தளர்ந்த உடல் பற்றிய பரிகாசம் எல்லாமும் சேர்ந்ததது .
இந்த புது வீடு வரும் வரை தேரை பற்றிய எண்ணங்களைக் கொஞ்ச நாட்களாகவே மறந்து விட்டிருந்தேன் . ஜூலியையும் கூட. ஓ ! ஜூலி ! என் அழகிய தேரைப் பெண்ணே …
குளியலறையில் என் நிர்வாணம் பார்த்துக் கொண்டு அசையாமல் இருக்கும் இந்தத் தேரைக்கு எனக்குள் புதைந்து போயிருக்கும் கருப்புப் பக்கங்களை புரட்ட வைக்கத் தெரிந்திருக்கிறது .
தேரை மீதான என் ஆர்வம் அல்லது வெறி எப்பொழுதிருந்து என்று தெரியவில்லை . சிறுவயதில் எல்லாரும் பட்டாம்பூச்சி துரத்திக் கொண்டிருக்கையில் நான் மட்டும் மழையூறிப் போன குறும்பாறைகளைப் புரட்டிப் பொன்னிறத் தேரைகளைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். ஓடில்லாத ஆமை போலக் குறுகிப் படுத்திருக்கும் தேரையின் பின்புறத்தைக் குச்சியால் தட்டித் தட்டி ஏதேனும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை, அடையச் செய்வதை ஒரு ரகசிய விளையாட்டாகவே வைத்திருந்திருக்கிறேன் .
என் உலகம் ரகசியமானது . யாருக்கும் சொந்தமானது அல்ல. என்னைத் தவிர யாருக்கும் இடமில்லாதது . என் ஆழ்மனத்தின் அபத்தங்களும் அதைச் செயல்படுத்திப் பார்க்கும் இச்சைகளும் மட்டுமே நிரம்பியது. எப்படியாயினும் எனக்கு சாதகமான விதிகள் கொண்ட விளையாட்டுகளைக் கொண்டது.
என் உலகிற்குள் நான் அனுமதித்த ஒரே ஒரு உயிரி ஜூலி தான். என் ரகசிய விளையாட்டின் துணை அவள் .
ஜூலியை யாருக்கும் பிடிக்காது . அவளது தோல் தேரையினுடையதைக் கடன் வாங்கி இருக்கும். ஒரு மாதிரி வறண்டு போன பளிங்காய் அவள் சட்டையில்லாத முதுகிருக்கும் . உனக்கெப்படித் தெரியும் என்று கேட்பவர்கள் மட்டும் கதையைத் தொடரவும். எனக்குத் தெரியும். அவள் தலைமுடிகளின் எண்ணிக்கை கூட என்னால் நிர்ணயிக்கப்பட்டது தான்.
அந்த இரட்டை குதிரை பின்னல்கள் கூட நான் சொன்னது போல ஆடுபவைகள். அவளது கண்களை உங்களுக்குப் பிடிக்காது. நிச்சயம் பிடிக்காது . வட்டச் சில்லுகள் கொண்ட கண்ணாடிகளுக்குள் அடைபட்டிருக்கும் அவள் கண்கள் காறிக் கொண்டே இருக்கும் . கழுத்திலோ நெற்றியிலோ புறங்கைகளிலோ எனக்கு மட்டுமே காரணம் தெரிந்த காயங்கள் இருக்கும் . பினோஃபார்மில் நடந்து வருகையில் ஒரு பிராணி போலவே இருப்பாள். அந்தப் பிராணியை சரியாக இனம் கண்டு கொண்டவன் நான் மட்டுமே . இரு வார்த்தைகளில் சொல்வதானால் ஜூலி என் அடிமை .
Read the rest of this entry »
Tags: fantasy, Horror, short story
கிட்டத் தட்ட ஒன்னரை வருடங்களாகியிருக்கிறது , ஏற்கனவே எழுதப்பட்ட கதை ஒன்றை எழுதியவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள , என்னை நானே மாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள .
மோனாரிட்டா சென்ற வருடம் ஜனவரியில் பதிவிடப் பட்டு , ஒரே நாளில் மீண்டும் திருத்தி எழுதலாம் என நீக்கப்பட்டுவிட்ட கதை (??!) . என்னை நானே கொஞ்சமேனும் புரிந்து கொள்ள இந்த நாட்கள் இடம் தந்திருக்கின்றன. நன்றாக இருந்தால் என்ன , இல்லாவிட்டால் என்ன ? , இது என் கதை என்பதில் எந்தவிதப் பொய்யும் இல்லையே . அதே போல எங்கும் வெறுமையும் வெற்றிடமுமே சந்திக்க நேர்ந்தாலும் இது என் வாழ்கை என்பது தானே நிதர்சனம் .
தேயும் நிலவை ரசிக்கும் அதே மனதோடு ஓயும் இந்த வாழ்வையும் பார்க்கப் பழகவேண்டுமென்பது மட்டும் தெரிகிறது . விரக்தியா , வெறுமையா என்பது புரியவில்லை ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காயங்கள் ஆறும் , தழும்புகள் மறையக் கொஞ்ச நாட்களாகுமல்லவா? அல்லது இந்தத் தழும்பு அப்படியே மாறாமல் நின்றும் போகலாம் . கோடையின் தனிமை போன்ற குரு யாருமேயில்லை.
எது எப்படி ஆயினும் இதுவும் கடந்து போகட்டும் .
கல்லூரி இரண்டாவது வருடத்தில் கதை போல எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே என்னுடன் இருந்து எல்லா இம்சைகளையும் சகித்து வரும் பாலாவிற்கு இந்த நூறாவது பதிவு .
————————————————————————

அண்ட் தென் தே லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர் .
புத்தகத்தை மூடி மடியில் வைத்தேன் . எல்லா தேவதைக் கதைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் ஆரம்பிக்கின்றன . சூனியக்காரியோ , கொடுமைக்காரச் சித்தியோ , கிளியில் உயிர் உரித்து வைத்திருக்கும் மந்திரவாதியோ. தேவதைகளோ , ராஜகுமாரர்களோ தான் மாறுகிறார்கள் கதை மாறுவதில்லை . கதையின் முடிவில் முத்தமிடவும் மறப்பதில்லை .
சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் , சரியாக இரவு ஒன்பதரை மணிக்கு அவள் என்னை பார்த்துப் புன்னகைத்த வினாடியில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது . ஒரு வேளை தேவதைக் கதைகள் இது போலவும் தொடங்கக் கூடும் .
Read the rest of this entry »
Tags: Fairy tale, Story