நினைவுதிர் காலம்

எரிந்து கொண்டிருக்கின்றன என் இரவுகள் .வெறும் புகையாகி மறைகின்றன பகற்பொழுதுகள். வெகுகாலமாய் என் உதட்டிற்குள் உறைந்து போய் கிடக்கும் முத்தமொன்று எதிர்பாராத ஒரு தருணத்தில் தப்பியோடப் போவதாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது.
உன் ஸ்பரிசம் பாராமல் நத்தையின் ஓட்டிற்குள் சுருங்கிப்போய் கிடக்கின்றன என் உள்ளங்கை ரேகைகள். உன் நினைவாய் வைத்திருக்கும் தலையணை , உன் கூந்தலச்சுப் பதியாமல் அழுக்கேறி வருகிறது.
வீட்டிலிருக்கும் ஒவ்வொரு கதவிடமும் நீ இன்னொரு கதவின் பின் ஒளிந்திருப்பதாக ஏமாற்றி வருகிறேன். உனக்கென வாங்கிய ஆடைகள் , வெகு நேரம் நீ குளித்துக் கொண்டிருப்பதாய், நான் சொல்லிய பொய்யை நம்பி காற்றிலாடியபடி காத்திருக்கின்றன .
என் சதுரங்கப் பலகையில் ஒரு நிறக் கட்டங்கள் மட்டும் தேய்ந்தழிந்து போய் ஒற்றைவழிப் பாதைகளாகி விட்டிருக்கின்றன. என் ஜன்னலுக்கு வெகு தூரமுள்ள மரமொன்று மீண்டும் அரும்பத் துவங்கியிருக்கிறது பறவைகளின் வினோத சப்தத்துடன் .
வெயிலுக்கும் உனக்கும் என்ன தொடர்பென்று தெரியாமல் கடந்து போய்விட்டிருக்கிறது இந்த கோடையும்.
————————————–
Tags: காதல் கடிதங்கள், love letter

கடவுளான பின்
கால் மேல் கால் போட்டுக்கொண்டு
சும்மாயிருக்க முடியுமா ..?
என்னென்ன கடமைகள்
என்னென்ன கவலைகள்
என்னென்ன சலுகைகள்
பட்டியல் பதிவு செய்யத் தொடங்கனேன் …
நான் வாங்கும் சம்பளம் போல
உடனே தீர்ந்து போனது
ஒட்டு மொத்தக் காகிதமும் …
மிட்டாய் வாங்கித் தருவதாக
வாக்குறுதி தந்து
என் மகனின் கணக்கு புத்தகத்தில் இருந்து
கிழித்த காகிதங்கள்
கணத்தில் காணாமல் போயின …
இன்றைக்கு இது போதும்
கடவுள் வேலை கடினமானதோ
களைத்துப்போனதே பட்டியலுக்கே…
கண்கள் கெஞ்ச
துவங்கலாம் வேலை நாளையிலிருந்து
தூங்கிப்போனேன் …
—————————————
Read the rest of this entry »
Tags: கடவுள், கவிதை, பிச்சை, poem

எனக்கிருக்கும் எண்பது வேலைகளில்
எண்பத்தி ஒன்றவதாகத்
தேடிகொண்டிருக்கிறேன்
ஒரு பிச்சைக்காரனை …
—————————
பரவாயில்லை அது
பிச்சைக்காரி என்ற போதிலும் …
—————————
தலைகவசத்தை விட
தர்மமே தலை காக்குமாம் …
வாகனம் வாங்கும் போது
கண்டத்தையும் வாங்கி வந்திருக்கிறேனாம் …
—————————–
அதனால் …
என் இப்போதைய அவசரத் தேவை
தினமும் ஒரு பிச்சைப்பாத்திரம் …
ஒரே பிச்சைப்பாத்திரம்.
விளம்பரமா கொடுக்கமுடியும்
தினசரிகளில் இதற்காக ..
கடைசியில் கண்டும் பிடித்து விட்டேன் …
Read the rest of this entry »
Tags: கடவுள், கவிதை, பிச்சை, poem

Baa Baa Black Sheep சொன்ன காலங்கள் நினைவிலில்லை . ஆனால் அம்மாவின் விரலைப் பிடித்து அழுதுகொண்டே , போகமாட்டேன் என மணலில் விழுந்து புரண்ட என் முதல் வகுப்பறை முன்னால் கொட்டப்பட்டிருந்த மணலின் சூடு நன்றாக நினைவிலுள்ளது . இன்னமும் பச்சை நிறம் பூசப்பட்ட அந்த மரச்சட்டக் கதவு காற்றிலாடியபடியே இருக்கிறது . எவ்வளவு தேற்றியும் அடங்காத என் அழுகை , கௌசல்யா டீச்சர் தந்த ஒரு mahalacto king இல் அடங்கிப் போனது . ஒரு வேளை தேவதைகளுக்கும் எனக்குமான உறவு பூத்தது கூட அப்பொழுது தானா . அந்த மிட்டாய் உறையில் அழகான பெண் செய்து கொடுத்த அந்த நண்பன் யாரென இன்னமும் நினைவு படுத்த முயன்று கொண்டிருக்கிறேன்.
யோசித்துப் பார்கையில் பால்யத்தைக் கடந்து வெகுதூரம் வந்து விட்டது போல் இருக்கிறது . பால்யம் ஒரு பெருங்கனவைப் போல அவ்வப்பொழுது வந்து போய்க்கொண்டிருக்கிறது .
எப்பொழுது தொலைக்கத் துவங்குகிறோம் பால்யத்தை ?? பால்யத்தை எங்கேனும் எப்பொழுதேனும் நாம் தேட முற்பட்டதுண்டா ?? எதேச்சையாக ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் காண நேரும் பால்ய கால நண்பனுடன் முதலில் சென்று அறிமுகம் செய்து கொள்வதை எது தடுக்கிறது ???
மூன்றாம் வகுப்பில் நம்மை விட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று தூக்கம் தொலையச் செய்தவளை , ஏதோ ஒரு தெருவில் கணவனின் அதட்டல்களுக்குப் பின் தலை குனிந்து செல்வதைப் பார்க்க நேர்கையில் சட்டென்று ஏன் ஒரு வன்மம் தோன்றுகிறது .
அடித்துக் கொண்டும் , கைகள் கோர்த்தும் திரிந்த சிறு வயதுத் தோழி ஒருத்தியை இப்பொழுது காண்கையில், எட்ட நின்று பேசும் இடைவெளியினுள்ளா ஒளிந்து கிடக்கிறது பால்யம் ?? சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகையில் நாமறியாமல் ஒரே ஒரு பந்து மட்டுமாவது நின்று பார்த்து விட்டுச் செல்லத் தோன்றுகிறதே , அந்த உணர்வுக்குப் பெயர் என்ன ???
பால்யமும் , அது குறித்தான கேள்விகளும் எழுப்பும் அலைகள் புதிரானவை . அவைகளை விளக்கும் வயது தொட்டிருக்கும் பொழுதே பால்யம் நம்மை விட்டு விலகத் துவங்கியிருக்கிறது . ஒரு மாய வலையாகவே பால்யம் நம்மை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
தோழன் பாலாவைத் தொடர்ந்து , புத்தகத்தில் நா. முத்துக்குமாரின் பாலகாண்டம் குறித்த எனது பார்வை இங்கே ….
பால்யத்தின் மாயச் சுழலில் சிக்கும் இலையாகி நதியின் போக்கில் சென்றிருப்போம் சில மைக்ரோ யுகங்களாவது …
நன்றி ,
சேரல் ,
ஞானசேகர் .
Tags: நா முத்துக்குமார், பாலகாண்டம், புத்தகம், book review
நேற்று என்பது மீட்டப்பட்டுவிட்ட இசைக் குறிப்புகளைப் போல .. அழகானது எனினும் எவ்வளவு முயன்றாலும் எப்பொழுதுமே மீண்டும் மீட்ட முடியாதது.. மாறாக ஒரு அழகான மாலை நேரத்தில் ஒரு கோப்பைத் தேநீருடன் , பதிவு செய்யப்பட அதே இசைக் குறிப்புகளைக் கேட்டு ரசிக்கலாம் ..
ஆகஸ்ட் 4, 2003 … தேடலுடனும் , குறுகுறுப்புடனும் , புது இடம் , புதிய சூழ்நிலைகள் பற்றிய பயத்துடனும் வாழ்வின் ஒரு புதிய பயணத்தில் நுழைந்த நாள் …. எல்லாமே நட்பு பார்த்துக் கொண்டது .. இன்று எங்கள் பயணத்தின் ஏழாவது வருடம் துவங்குகிறது …
நாங்கள் மீட்டிய சில இசைக்குறிப்புகளை உங்களோடு சேர்ந்து ரசிக்க விரும்புகிறேன் …
நாங்களே இசையமைத்து இயக்கிய கல்லூரி பாடலுக்காக எழுதிய வரிகள் .. எங்கள் கல்லூரிக்காக ….
Read the rest of this entry »
Tags: :-), Chemical Engg, friends, memories, NITT, Senti, Tamil Mandram

நாங்க நாலு பேரு
எங்களின் பாதைகள்
கிளைபிரிந்திருக்கலாம் …
எங்களுக்கான பயணங்கள்
வெவ்வேறு திசைகளில்
பணிக்கப்பட்டிருக்கலாம் …
இருந்தும்
நாட்கள் கழித்து மீண்டும்
சந்திக்கையிலெல்லாம்
கணநேர மௌனங்கள் சொல்லிடும்
நாங்கள் யார் என்பதை ….
நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் . ஆனால் உங்கள் நெருக்கமானவர்களை நாங்கள் நினைவுபடுத்தப் போவது மட்டும் உறுதி .
Read the rest of this entry »
Tags: Add new tag, coll, friends, friendship day, nadodigal