கனவில் வருபவள் 6
தொலைந்து போன
ஜன்னல் தேடி
காற்று வீசிப் போகுமோ …
கலைந்து போன
கனவின் மீதி
கண்கள் மீண்டும் கேட்குமோ …
கரைந்து போன
மெழுகின் வாசம்
திரிகள் கருகித் தேடுமோ ..
பறந்து வந்த
திசையின் திசையை
மறந்து பறவை தவிக்குமோ …
இரவல் வெளிச்சம்
இழந்த நிலவு
மின்மினிகளைக் கேட்டு அனுப்புமோ …
எங்கே எந்தன்
காதல் நெஞ்சம்
இனியும் தேட மாட்டேன்
நானும் ..
பார்த்து வந்த
இடங்கள் எல்லாம்
காத்திருந்தன
கவிதைகள் மட்டும்…
—————————————————-
உடைந்த வார்த்தைகளை
உதிரம் கொண்டு ஒட்ட வைத்து
உனக்கு மாலை தொடுத்திருந்தேன்
கவிதை என்கிறாய்..
————————————–
எங்கோ விழும்
மின்னல்கள் …
இடி மட்டும்
என்னுள் …
கடலோரம் நிற்பதாய்
குறி சொல்லிச் சென்றன
சில
குளிர் தேசப் பறவைகள் …
எனக்கும் சிறகுகள்
உண்டு
உடைந்து போன இறகுகள்
கொண்டு…
உன் நிழல் போதும்
நிஜமா கேட்கிறேன் ?
பழகிய நாட்கள் கூட
மறந்திருக்காது …
உருகிய உன்னால்
எப்படி முடிந்தது
உடைத்துக்கொண்டு போக …
சில கவிதைகள்
இப்படியே முடிகின்றன
முடிவு தெரியாத
என் போல …
—————————————————
Tags: all about my dream, Love poems

12 comments so far
Leave a reply