“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன்.
——————————————————–
Tags: Love poems
சில விஷயங்கள் அமையப் பெற்றதற்காக சில சமயங்களில் மட்டுமே கர்வங் கொள்ள முடியும் . அது போன்ற ஒரு தருணம் தான் இதுவும் . சில காலங்கள் பார்த்துப் பார்த்து ரசித்து விட்டு , முதல் நாள் வகுப்பில் நுழையும் ஒரு குழந்தையின் தயக்கத்துடனும் , காதலைச் சொல்லப் போகும் தவிப்புடனும் சில கவிதைகளுடன் நேற்று தான் பதிவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது . மழையில்லாத ஒரு மாலை நேரத்து மின்னல் போல் சட்டென்று கடந்து போய்விட்டது ஒரு வருடம் . எத்தனை உறவுகள் , எத்தனை பரிவுகள் , எத்தனை உரிமையான செல்லக் குட்டுகள் …
உங்கள் அத்தனை அன்புக்கும் மௌனங்கள் மட்டுமே பதிலாய் என்னிடம் .. இந்த வாரம் மேகத்தில் மிதப்பதற்கு என எனக்கு எழுதி வைக்கப் பட்டிருக்கிறது போலும் . திங்களன்று உயிரோடை முடிவுகள் .. நேற்று சுவாரசிய தளத்திற்கான தேர்வு .. அதுவும் நான் வியந்து உள்வாங்கும் கவிதைகளின் சொந்தக்காரர் பிரவின்ஸ்காவிடமிருந்து ..
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி அண்ணா .. ! உங்கள் அறிமுகத்தை நியாப்படுத்த முயன்ற வரை முயற்சி செய்கிறேன் ..
ஏனென்று தெரியவில்லை (அட நெஜமா பா ! ) என் கவிதைகள் காதலைத் தழுவிக்கொண்டோ இல்லை அதன் நிழலின் பின் ஒளிந்து கொண்டோ தான் எட்டிப்பார்த்திருக்கின்றன . இதுவரையிலும்….. அவள் சில அழகிய குறிப்புகளும் , கனவில் வருபவளிலும் கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ ! சேரல் சொன்னது போல் அழகான விடுமுறை தரலாமோ காதல் கவிதைகளுக்கு ? தரலாம்
எவ்வளவு எழுதியும் தீராத காதலே கொஞ்ச நாள் மட்டும் என்னுள்ளேயே உறைந்து கிட , ஆரம்ப நாட்களைப் போல ….
பரிட்சார்த்தமான சில கதை முயற்சிகளையும் , காதலல்லாத கவிதைகளையும் தர முயற்சி செய்கிறேன் . உங்கள் அன்பும் , சில செல்லக் கண்டிப்புகளும் எப்பொழுதும் என்னுடன் என்ற நம்பிக்கையுடன் ..
நன்றி பிரவின்ஸ்கா !
நன்றி நண்பர்களே !
ப்ரியமுடன் ,
ரெஜோ
பின்குறிப்பு :
இந்த விருதை இன்னும் ஆறு பேருக்குத் தர வேண்டும் . கிட்டத் தட்ட என் பிரியமானவர்கள் விரும்பும் தளங்கள், அனைவரும் அனைத்தும் பரிந்துரை செய்யப் பட்டுவிட்டதால் புதியதாக தளம் ஆரம்பித்திருக்கும் , ஆரம்பிக்கப் போகும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளோடு முடித்துக் கொள்கிறேன் .
Tags: Blogger award
“ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாளாம்”
தலையணை தினமும்
உன்னைப் பற்றிக் கதை சொல்வதாலேயே
கண் சாய்க்கிறேன்.
——————————————————–
Tags: Love poems
ஒருவேளை வெறும் சம்பிரதாயமாக போய்விடுமோ என எண்ணி தான் இரண்டு நாட்களாக இதைப் பதிவிடாமல் இருந்தேன் . இருந்தும் மனதில் இருப்பதைச் சொல்லித் தானே ஆக வேண்டும் .
உயிரோடை முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகின்றன . வெகு நாட்கள் கழித்து வெற்றி தோல்வி பற்றி யோசிக்க வைத்த ஒன்று இப்போட்டி .
முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது வடகரை வேலனுக்கும் , வெயிலானுக்கும் தான் . எனது தளத்தினை எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி , அவ்வப்பொழுது தங்கள் கருத்துகளைத் தெரிவித்து , தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்குபெறத் தூண்டியவர்கள் அவர்கள் தான் . உங்களுக்கு என்றுமே நான் கடமைப் பட்டிருக்கிறேன் .
சேரல் . எனது பிரியத்திற்குரிய அண்ணா . கல்லூரியில் நாங்கள் எல்லாம் அ ன்னா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கையில் , மரபை மீறிய கவிதைகள் பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தவர் . சேரல் பற்றி சொல்லி விட்டு ப்ரவின்ஸ்கா பற்றி சொல்லாவிட்டால் எப்படி
இவர்கள் இருவரும் எனது தளத்தைப் படிக்கிறார்கள் என்பதே நான் வானில் பறக்கப் போதுமானது. ஏதாவது பின்னூட்டம் வந்தால் சொல்லவும் வேண்டுமா …
யாரையாவது பார்த்து என்னைப் போலவே பேசுகிறானே , யோசிக்கிறான் என்று தோன்றியதுண்டா ? அப்படி எனக்குத் தோன்றிய அன்பர் தான் சத்யமணி . இன்னும் வலைத்தளம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் இவர் அழகான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் . வாழ்த்துகள் தோழர்
எனது கவிதைகளை ஏதாவது ஒன்று உருப்படி என்பதை அனுஜன்யாவும் , கே.ரவிஷங்கரும் நன்று என்று ஒரு வார்த்தை சொன்னாலே வகைப் படுத்திக் கொள்வேன் .:-)
மச்சான் ரிஜோ என்று செல்லமாக குட்டு வைக்கும் இளவரசன் , சார் சும்மா கவிதைன்னு இப்படி எல்லாம் எழுதக் கூடாது என்று கேள்விகளாகக் கேட்கும் அப்பாஸ் , நன்றாக இருக்கிறது என்பது தவிர வேறெதுவும் இதுவரை சொல்லாத ரேவதி எல்லாருமே என் சக பயணிகள் .
எல்லாவற்றுக்கும் மேல் எப்பொழுதும் என்ன எழுதினாலும் முதலில் படித்து உள்ளதை உள்ளபடிச் சொல்பவர்கள் என் பிரியத்திற்குரிய நண்பன் பாலாவும் , பிரிய தங்கை சத்யாவும் . அவர்களுக்கு நன்றிகள் எல்லாம் கிடையாது , எப்பொழுதும் என் எழுத்துகளை முதலில் படிக்கும் தண்டனை மட்டுமே .
எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனைக்கும் காரணமான உயிரோடை லாவண்யா அவர்களுக்கும் , போட்டி நடுவர்களுக்கும் நன்றிகளும் , அவர்களின் இந்த சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகளும்
.
போட்டியில் வெற்றி பெற்ற , மற்றும் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
மேலும் எப்பொழுதும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நண்பர்களுக்கும் , பின்னூட்டத்தில் வாழ்த்திய நண்பர்கள் அத்தனை பேருக்கும் நன்றிகளும் அன்புகளும்
ப்ரியமுடன் ,
ரெஜோ
Tags: Thanks giving
தொலைந்து போன
ஜன்னல் தேடி
காற்று வீசிப் போகுமோ …
கலைந்து போன
கனவின் மீதி
கண்கள் மீண்டும் கேட்குமோ …
கரைந்து போன
மெழுகின் வாசம்
திரிகள் கருகித் தேடுமோ ..
பறந்து வந்த
திசையின் திசையை
மறந்து பறவை தவிக்குமோ …
Tags: all about my dream, Love poems
1:
எனக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனத் தெரியாது . ஆனால் இந்தக் கதையின் அவனைப் பற்றி எனக்கு ஓரளவேனும் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் . குறைந்த பட்சம் அவனது ஒரு இரவின் பாதியாவது .
இரவு . ஆமாம் .. இரவே தான் . என்னை நானே முதலீடு செய்து கொள்ளும் நேரம் அதுதான் . இதைச் சொல்வதற்காக எனக்கு எந்த வருத்தமோ பச்சாதாபமோ கிடையாது . நான் அப்படித்தான். அதில் எனக்கு ஒரு கர்வம் கூட உண்டு. உங்களுக்காக பாரம் சுமந்து ஓவ்வொரு நாள் காலையும் உயித்தெழ என்னால் மட்டுமே முடியும். நிற்க . இந்தக் கதை என்னைப் பற்றி அல்லவே. கொஞ்சம் கவிதைகள் படித்தாலே நான் யார் என்பதைத் தேடச் சொல்லி , தேடித் தேடி இறுதியில் நான் என்பதே எஞ்சி நிற்கிறது. அவனுக்கு வருகிறேன் .
என் பெயர் .. ஓ .. கதையின் ஆரம்பம் என்றால் பெயர் சொல்ல வேண்டுமல்லவா. இந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளாமல் அநேகம் பேர் விரலைக் கூடத் தொடுவதில்லை. நான் சந்தித்திருக்கும் அநேகம் பேரிடம் முதலில் சந்திக்கும் கேள்வி என் பெயர் பற்றியதாகத் தான் இருக்கிறது . அந்த நமைச்சல் உங்களுக்கும் இருப்பின் தெரிந்து கொள்ளுங்கள் அந்த இரவில் என் பெயர் வைஷ்ணவி.
இந்தப் பெயரும் அவன் வைத்தது தான்.
Tags: short story, uyirodai