Archive for September, 2008
க லை வ து இயல்பே
“மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”
உபன்யாசகர் தெலுங்கில் சொல்லிக் கொண்டிருப்பதை நன்றாகத் தமிழ் தெரிந்தவர்கள் , இன்னும் இதை விடத் தெளிவாக மொழிபெயர்க்கக் கூடும் .
இடம் : விசா பாலாஜி திருக்கோயில் .
ஒருமுறையாவது ஹைதராபாத் வந்தவர்கள் ‘விசா பாலாஜியைப் ‘பற்றிக் கேள்விப் படாமல் இருந்திருக்க முடியாது என நினைக்கிறேன் .அவருக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது , அவருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் என்ன தொடர்பு என்பது அவருக்கே தெரிந்த தொழில் ரகசியம் .
சரியாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இறங்கி , இந்த ஊர் தெலுங்கு , இந்தி , உருது கலந்த பெயர் சொல்ல முடியாத ஹைப்ரிட் மொழி தெரியாதவர்கள் ,டாக்சி வாலாவிடம் அவன் சேட்டுக்குக் கட்ட வேண்டிய வட்டிக்கும் சேர்த்து முன்னூறு வரை அழுது ‘சிலுக்குரு’ போயும் பாலாஜியை தரிசிக்கலாம் . சரியான பஸ் நம்பர் கண்டுபிடித்துச் சென்றால் பத்து ரூபாய் கூட ஆகாது . ஷேர் ஆட்டோவில் சென்றால் அதிகபட்சம் இருபது ரூபாய் . நம்மூர் போல எல்லாம் சம்பல் பள்ளத்தாக்கில் இருந்து வந்தவர்கள் அல்ல இங்கே .
எங்களுக்கு அந்தக் கவலையே கிடையாது . எங்கள் நிறுவனத்திலேயே லோன் போட்டு , இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வண்டியும் , ஹெல்மேட்டும் வாங்கி வைத்திருந்தோம் நாங்கள் …… நானும் விஜயும் .இங்கு வந்து வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது . எங்களைப் பற்றி சொல்ல சுவாரசியமாக என்ன இருக்கிறது , சென்ற வாரம் தான் எல் போர்டை மாற்றினோம் என்பதைத் தவிர .விசா பாலாஜியப் பற்றிப் பார்ப்போம் கொஞ்சம் .
இது போன்ற ஒரு ஒதுக்குப் புறத்தில் தெலுங்கு பட ஷூட்டிங் எடுக்காமல் கோவில் கட்டியவரைப் பார்த்தால் தாராளமாகக் கை குடுக்கலாம் . ஆட்டு மந்தை அடைத்து வைக்க , பட்டை அடைத்து கொஞ்சம் சதுரம் போன்ற வடிவில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது போலிருந்தது அந்தப் பேருந்து நிலையம் .இறங்கியதுமே ஒரு சிறுமியின் தெலுங்கில் மாட்டிக் கொண்டோம் .
” ரண்டி , பாலாஜிகு தெக்காய தீசுகொண்ட” என நச்சரித்துக் கொண்டிருந்தாள் .
விஜய் முடிந்த அளவு ” ஒத்த … ஒத்த … ” என்று சொல்லிப் பார்த்தான் . அவள் நேராக கடைக்கு இழுத்துக் கொண்டு போன பின் தான் தான் விட்டாள் . தேங்காய் பழம் வாங்கியதற்கு இலவசமாக செருப்பு வைத்துப் போகச் சொன்னாள் .
பள்ளி போகிறவளாக இருந்திருந்தால் ஆறாம் வகுப்பில் பிரித்திவி , சம்யுக்தாவை எப்படி அலேக்காக குதிரையில் தூக்கிச் சென்றிருந்திருப்பார் என சரித்திர ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருப்பாள் .பத்து ரூபாய் அதிகம் தந்தேன் . முப்பது ரூபைகே பாபு என பத்தை திருப்பித் தந்தாள் . நேர்மைக்கு என்றுமே ஏழ்மை தான் .
Tags: கதை நேரம்