முன்னறிமுகமில்லாத தெருக்களே
தூண்டிலெனக் குத்தி இழுத்து
கண்களில் பாய்ச்சுகின்றன கவனத்தை
இறந்து போன
ஏதோ ஒரு இரவில்
இங்கு தானா வந்து போனது
அடைக்கப் பட்ட வாகனத்தில்
சென்றாலும்
கருப்பு பூசிய கண்ணாடியை
ஊடுருவிப் பார்க்கின்றன கண்கள்
உடன் வருபவன் பற்றிய
ப்ரக்ஞை ஏதுமின்றி
வளையும் வரை
திரும்பியே இருக்கிறது
கழுத்தும் மனமும்
இங்குதானா
இரவைக் கடந்தது
அவள் கைப்பிடித்து
இத்தூங்குமூஞ்சி மரங்களா
அகாலத்தில் பூச்சொரிந்தது
என் முதல் முத்தம் பார்த்து
இந்த வீட்டின் படுக்கையறையிலா
தூங்கும் அவளைப் பார்த்துக் கொண்டே
புத்தகம் படிக்கக் கற்றுக் கொண்டது
நீலப் பூமரம்
சாலையிலோடும் மானும்
பால் சிந்தப் பார்க்கும் நிலவும்
அன்றைய மௌனத்தின் இசையும்
அதே சில்லிட்ட காற்றும்
அன்று போலவேயிருந்தும்
காணவேயில்லை
இந்தத் தெருவிலும் அவளை
விரும்பியோ பலவந்தமாயோ
பின்வரு நாட்களில்
இவைகளில் ஏதாவது நடக்கக் கூடுமென
இல்லாத
அவள் தெரு பற்றிய குறிப்புகளைச்
சேகரித்துக் கொண்டேயிருக்கிறது
ஏகாந்தத்தில் மனது .
Tags: ஆதலினால் கவிதை ...

7 comments so far
Leave a reply