கூடுகட்ட மரங்களற்று

குறைந்த பட்சம் புகை போக்கிகளும் காணாமல்

டிஷ் ஆண்டெனாக்கள் தேடி

நகர் நோக்கிப் பறந்தபடி இருக்கின்றன

காகங்கள்

 

கதை சொல்ல யாருமின்றி

உருக்குலைந்து திண்ணைகளோரம்

மூப்பேறிய குறு உரல்களில்

பாக்குடன் சேர்த்து

பழசையும் இடித்தபடி

வானம் பார்த்துக் கிடக்கின்றனர்

கதை சொல்லிப் பாட்டிகள்

பண்டிகைகள் மொத்தமும்

பெட்டிகளுக்குள் அடைக்கப் பட்டுவிட

காத்திருக்கிறார் அய்யனாரும்

மண் குதிரை பறப்பதற்காய்

 

உறைகளிலிட்டுப் பால் விற்க

பண்ணைக்குச் சென்று விட்ட

மாடுகளின் பின்னே

சமையல் எரிவாயுவாய்

வாசல் தாண்டி

வீடு புகுந்து விட்டிருக்கின்றன

சாணக் கோலங்கள்

 

வெகுகாலமாய் புற்கள் மட்டுமே

பார்த்துக் கிடந்த புன்செய்கள்

பெருமூச்சோடு சம்மதிக்கின்றன

தலையாட்டி

வீட்டு மனையென்று 

பெயர் மாற்றிக் கொள்ள  

 

எல்லாம் வெளியேறிவிட்ட பின்னும்

ஏறி விளையாடிய மரங்கள் உதிர்ந்தும் கூட

 

கிராமங்களின் தெருக்களில்

தீராத இச்சையோடு

அலைந்து கொண்டிருக்கின்றது

வெயில் மட்டும் – தன்

தீநாக்குகளைச் சப்புக் கொட்டிச்  

சுழற்றிய படி…

Tags:

This entry was posted on Tuesday, September 23rd, 2008 at 6:08 pm and is filed under ஆதலினால் கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments so far

 1 

கவித்துவம் கலையாமல் அடுக்கியிருப்பது அழகு.. ஆனால், கருப்பொருள் அடிக்கடி கவிதைகளில் காணக்கிடைக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால் கொஞ்சமாய் ஒரு ஏமாற்றமே கடைசியில் மிஞ்சி நிற்கிறது. உன் படைப்புகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ள மற்றொன்று.

September 23rd, 2008 at 6:21 pm
Rejovasan
 2 

நன்றி பாலா :-)

நேற்று இரவி வீடு திரும்புகையில் சட்டென்று தோன்றிய வரிகள் கீழே .

கூடுகட்ட மரங்களற்று
குறைந்த பட்சம் புகை போக்கிகளும் காணாமல்
டிஷ் ஆண்டெனாக்கள் தேடி
நகர் நோக்கிப் பறந்தபடி இருக்கின்றன
காகங்கள்

தலைப்பிலிருந்து மற்ற எல்லாமே fillers வகையறா தான் .. அது கூட காரணமாக இருக்கலாம் ..

அடுத்த கவிதைகளில் புதிதாக …

September 23rd, 2008 at 6:59 pm
sathya
 3 

நல்லா இருக்கு சீனி. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.கவிதை யோட கருத்தை விளக்க fill பண்னியிருந்தலும் கவிதைத்துவம் நல்லாவே இருக்கு.பிடிச்சிருக்கு :)

September 24th, 2008 at 10:32 am
Rejovasan
 4 

நன்றி sat :-)

September 24th, 2008 at 4:57 pm
அ.கவிக்குயில்
 5 

கிராமங்கள் நகரமயமாகும் புலம் பெயர்தலை தெளிவகாக்கூறி இருக்கிறாய்.கொஞ்சமே நிகழ்வுகள் குறிப்பிடபட்டிருந்தாலும், அனைத்தும் அருமை.பாக்குடன் சேர்த்து பழசையும் இடிக்கும் பாட்டி பிடித்திருந்தது.

September 26th, 2008 at 5:52 pm
Rejovasan
 6 

நன்றி கவிக்குயில் :-) வருகைக்கும்

September 26th, 2008 at 5:57 pm
Kalai
 7 

/*வெகுகாலமாய் புற்கள் மட்டுமே

பார்த்துக் கிடந்த புன்செய்கள்

பெருமூச்சோடு சம்மதிக்கின்றன

தலையாட்டி

வீட்டு மனையென்று

பெயர் மாற்றிக் கொள்ள*/

கிராமங்கள் நகர(ரக)மாவதை நாகரிகமாய் புன்செய்களே சொல்வது அருமை..:)

October 7th, 2008 at 2:51 pm
Rejovasan
 8 

சில சம்மதங்களின் பின்னும் , தலையாட்டல்களின் பின்னும் சொல்லப்படாத பல துயர வரிகள் எழுதப்பட்டு தான் உள்ளன .

October 9th, 2008 at 3:39 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment