மழைவாசமும்

மழலை வாசமும்

பிடிக்காதவர்கள் உண்டா

யாரேனும் இங்கே  ??

 

நீங்கள் பட்டியல் எடுப்பதாயிருந்தால்

விசாரிக்கத் தேவை இல்லை

என்னைப் பற்றி…

இருக்காது நிச்சயம்

என் பெயர் அதில் …

 

நாட்காட்டியுடன் 

நவம்பர் மாதத்திற்காக

காத்திருப்பவன் நானும் தான் …

 

அடுக்குமாடிக் குடியிருப்பில்

அடைக்கப்பட்டவர்களில்

ஒருவன் தான் என்றாலும்

நானொரு மழைப்பாடகன் என்பதில்

என்றுமே பெருமை உண்டெனக்கு …

 

அடைமழை பெய்யும் போது

அணைப்பதில் விருப்பம் சிலருக்கு

எட்ட நின்று ரசிப்பதில்

திருப்தி பலருக்கு …

 

உதடு குவித்து

முத்தம் தரப் பிடிக்கும்

சிலருக்கு

உள்ளங்கை காட்டி

முத்தம் வாங்கப் பிடிக்கும்

பலருக்கு …

 

மழையினில் நனைந்து

கொட்டும் ஒவ்வொரு துளியையும்

குருதியில் குழைத்து

மழையாகிடவே கனவெனக்கு..

 

எனது சில ஆயிர வினாடிகளுக்கு

தற்காலிக ஓய்வு தந்துவிட்ட

மாலை நேரம் அது

 

மெல்ல மழைநேரமாயும்

ஆகிக் கொண்டிருந்தது …

 

உதறிவிட்டாலும் சிதறியதுளிகள்

மீண்டும் சென்று மேகம் சேரும் …

 

உன் போலத்தானா

நானும் மழையே ..!

 

மழை தொட்டு

முத்தமிட்ட மண் கிளம்பும்

வாசம் போல்

என்னுள் சுவாசமாய் கலந்துவிட்ட

நம் நியாபகங்கள் …

 

எப்படி இருக்கிறாய்

என் பிரிய தோழி …

 

கலைந்து போன மேகங்கள்

எல்லாம் கூடி

என் மனதிற்குள் மழை …

 

இன்றும் நினைவுபடுத்த முடிவதில்லை

உன்னைச் சந்திக்கும் முன்

நான் சந்தித்திருந்த சராசரி நாட்களை ..

 

தேடிவந்த உறவுனது தோழி …

 

மோதலில் தான் நிகழ்ந்தது

நம் முதல் சந்திப்பு …

 

இன்னொரு முறை

நிச்சயமாய் சந்திக்க விருப்பமில்லை

நிச்சயித்து இருந்தது இருவர் மனதும் …

 

நாமொன்று நினைக்க

நட்பொன்று நினைத்திருந்தது …

 

கரம்பற்றி குலுக்கினேன் நானும்

 

அன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே …

 

ஒருநாள் தவறி நீ எடுத்துச் சென்ற

எனது குறிப்பேட்டில்

எனக்கே புரியாமல் செய்திருந்த

கிறுக்கல்களை

அழகாக்கித் திரும்பத் தந்தாய்

கவிதை என்று ….

 

அந்த அழகான தருணத்தை

கவிதையாக வளர்த்திட

இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்

வார்த்தைகளை …

 

அன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே …

 

என் கவிதைகளுக்கும்

ஒரு வாசகி கிடைத்தாய்

நீ வாசிக்கவே எழுதத்துவங்கினேன்

நானும் …

 

கைப்பேசி பல கதை எழுதும்

நம் நட்பைப்பற்றி

 

அன்றொரு நாள்  வேண்டுமென்றே

என்னைக் காக்க வைத்துத்

தோற்க வைத்ததற்காக

மன்னிப்புக் கேட்டு நீ எழுதித் தந்த

கடிதத்திற்காக

மன்னிப்பிற்கு மரண தண்டனை

விதித்தேன் மகிழ்ச்சியாக 

 

மன்னிப்பா அதெந்த மொழி

மறந்து போனேனே நானும்

கவிதை பேசினாய் நீயும்

 

அன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே …

 

முக்கிய நாட்களில் பரிசளிப்பது போய்

பரிசளிக்கும் நாட்கள்

முக்கிய நாட்களானது …

 

விழா நாட்கள் காத்துக்கிடந்தன

நம் வருகைக்காக 

 

ஒருநாள் நான் தோற்றுப்போய்

துவண்டிருந்த பொழுது

அழுவது ஆண் பிள்ளைக்கு

அழகா என்றாய் ?

 

வருகிறதே என்ன செய்ய என்றேன் ??

 

சரி இனியொருமுறை

கண்கள் கலங்கினாள்

என்னிடம் சொல்

உனக்காக அழக் காத்திருக்கும்

என் கண்கள் என்றாய்

 

அழுகை உறைந்து போய்

அதிசயித்து இருந்தேன் …

 

அன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே …

 

எனது வெற்றிகள் அனைத்தும்

எனக்கு முன்னே

உன்னிடம் வந்து கவிதைகள் பாடி

புன்னகைப் பரிசில்கள்

பெறத் துவங்கின …

 

எனக்குக் கிடைக்காதென்று

மறந்ததை எல்லாம்

கண்முன்னே காட்டி நிறுத்தினாய்

 

என்ன செய்யப்போகிறேன்

இத்தனைக்கும் கைம்மாறு நானுனக்கு

கேட்டதற்கு நட்பு போதுமென்றாய்…

 

அன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே …

 

கனவு போலத்தான் இருக்கிறது

நீ என்னைக் கடந்துபோனது …

 

எல்லா மழையும்

என்னோருவனுக்கே

என்று நினைத்ததே என் தவறா??

 

தாயிடம் முத்தம் வாங்கும்

தம்பி பார்த்து பொறாமைப்படும்

குழந்தையின் மனநிலையில் நான்

உனக்கது  புரியாமல் போனது

என் துயரமே ….

 

 

பின்னொருநாளில்

பேசவந்த என்னிடம்

பார்வை கூடப் படரவிடாமல் சென்றாயே

நிஜமாகவே அழவில்லை அன்று

வாங்கிக்கொள்ள உன் கண்கள்

உடனில்லை என்பதால் 

 

அன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே – அன்றும்

நீ அங்கிருந்தாய்…

 

சத்தியமாக

சில நாட்கள் தான் 

பேசவில்லை உன்னுடன் கோபத்தால்

இதர நாட்களை இழந்தது

என் தயக்கத்தில் தான் …

ஒவ்வொரு நொடியும்

வாக்குமூலம் அளித்துக்  கொண்டிருக்கிறேன்

நிச்சயமாய் நீ கேட்கப் போவதில்லை

என்று தெரிந்தும் ..

 

எல்லாம் நாளை சரியாகிவிடும்

என்று எண்ணியே

தூங்கச்செல்கிறேன் தினமும்

எல்லாம் முடிந்துவிட்டது என்பதை

ஏன் தான் ஏற்க மறுக்கிறதோ

என் முட்டாள் மனது …

 

எவ்வளவோ முயன்றும்

தூக்கம் தொலைந்து போகவே

செய்கிறது சில நாட்களில்

நான் தொலைத்ததைக் கனவினில் கண்டு  ..

 

பிரிவுகளின் வலி சுகமானதுதான்

உணர்ந்திருக்கிறேன் சிலமுறை

ஆனால் ஏனோ இம்முறை மட்டும்

என் இடப்பக்கம் முழுவதும்

மெல்லிய  வலி  பரவுவதை உணர்கிறேன்

நிரந்தரமாய் …

 

நட்பின் பிரிவிலும் வலி உண்டு

கற்றுமுடித்திருந்த நேரத்தில்

புத்தகத்தில் என் பெயரையும்

எழுதிவைத்திருந்தது காலம் …

 

 

நினைவுகள்

அழகானவைகள்

சுகமானவைகள்

இன்பம் தருபவைகள்

நம்பப்படுகிறது என்றாலும்

என் காதோரம் மட்டும்

கீரி மறைகிறதோர் அசீரரி

இவை ஏதும் உனக்கில்லை என்று

வேண்டுமென்றால் வைத்துக்கொள் கண்ணீரை

பரிசளித்துவேறு செல்கிறது கண்களுக்கு …

 

இடம் பொருள் ஏவல்

ஏதும் தெரிவதில்லை

என் கண்களுக்கு

கண்ணீர்

ஐயோ அதைவிட மோசம்…

 

வலிக்கான சரியான

வரிவடிவம் வார்த்தைகளில்

வருவிக்க முடிவதில்லை

வழங்கிவிட்டுச் சென்ற

உன்னாலும் கூட ..

 

 

உன் பிறந்தநாளன்று

இரவு முழுவதும்

நான் பாடிய பாடல்கள்

இன்று கேட்கக்கூட முடிவதில்லை

என்னாலும் முடிவதில்லை பாட

முயல்வதில்லை நானும்

 

ஜூலை மாத ரயில் பயணமும்

மே மாத மின்னலும்

வழி தவறி பத்திரமாய்

நம்மிடம் வந்து சேர்ந்த பட்டாம்பூச்சிகளும்

நம் நினைவுகள் பொறித்துக் கொண்ட

இடங்களும் மறக்கமுடிவதில்லை

மறக்கமுயல்வதில்லை நானும் …

 

எல்லாவற்றிலும் நினைவுகள்

வரைந்து வைத்துவிட்டது

நம் நட்புக்காலம்

எதையும் அழிக்க எண்ணமில்லை

என் நெஞ்சில் எவ்வளவு

வலி கண்டபோதிலும் …

 

எனக்கான அடையாளங்களை

எப்படி முடியும்

நானே கலைத்துப்போட …

 

 

சத்தமில்லாமல் வந்து

சலனம் தந்தாய்

கண்ணிமைக்கும் நேரத்தில்

கடந்தும் சென்று விட்டாய்

நீ வந்து போனதன்

அடையாளமாய்

நான் மட்டும் நின்றுகொண்டிருக்கிறேன்

இன்னமும் அங்கேயே

 

நம்முடன் ஒன்றாகப்

பயணித்த பாதச் சுவடுகள்

ஒன்றாகத் தான் இருக்கின்றன இன்னமும்

நாம் பாதை மாறிச் சென்றபின்னும்

அவைகளை மீண்டும் சந்திக்கும் பொழுது

என்ன பதில் சொல்வேன்

உன்னை விட்டு விட்டு

நான் மட்டும் தனித்து வந்ததன் 

காரணமாக …

 

உடன் இருக்கும் வரை

ஒன்றுமே தோன்றவில்லை

எங்கே சென்றுவிடப் போகிறாய்

என்ற திமிர்கலந்த தைரியம்

உடன் இருந்தது …

 

ஆனால் ஒருநாள்

நீ சொல்லாமலேயே

சென்று விட்ட பிறகுதான்

காலம் கடந்துவிட்டதென்பதை

அறிகிறேன் …

 

 

சில நாட்களில்

கோபம் கூடக் கரைந்துபோகுமே

எனில் என் மேல்

நீ கொண்டிருப்பது

கோபத்தை விடக் கொடியதா??

எதுவாயினும்

காத்திருக்க நான்  தயார்

ஆனால் இழந்த காலம் ???

 

 

இனி ஒருவேளை

நாம் சந்திக்க நேர்ந்தால்

சிறு புன்னகையாவது தருவாயா

சின்ன கண்சிமிட்டல் ?

இல்லை கண்டுகொள்ளாமலேயே

போய்விடுவாயா

என்ற கலக்கம் தான்

இன்றெனக்கு …

 

 

நான் கவிதை எழுதத் துவங்கிய காரணம்

வேறொன்றாக இருக்கலாம்

ஆனால்

நான் கவிஞன் என்று

எனக்கே கர்வம் தந்தவள்

நீ தான் …

இன்றும் கூட எழுதுகிறேன் நிறைய

என்றாவது நீ

படிப்பாய் என் நம்பியே

 

உனக்காக நான்

நிர்ணயித்த

பட்டாம்பூச்சிகள் உலகம்

பட்டுபோய்கிடக்கிறது இன்று

புன்னகை தொலைத்த எனக்கும்

பாதை திறக்க மறுக்கிறது …

 

 

 

உனக்குப் பிடித்த பாடல் என

என்னைக் கேட்கச்சொல்லி

நீ கேட்ட பொழுது

கேட்காமல் அலட்சியப்படுத்திய நான்

இன்று திரும்பத் திரும்பக் கேட்கிறேன்

உனக்குக் கேட்காத தூரத்தில்

இருந்து கொண்டு

இன்னமும் அந்தப் பாடல்

எனக்குப் பிடிக்காது எனினும் …

 

தெரியுமா  உனக்கு

உன் பிறந்த நாள் அன்று

நான் அணிந்த சட்டையைத் தான்

விரும்பி அணிகிறேன் வீட்டினில் இன்னமும்

அது சிறிதாகப் போய் விட்டிருப்பினும் ..

 

எவ்வளவு அவசரமாகப்

போய் கொண்டிருந்தாலும்

யாரேனும் உன் பெயர் சொல்லி அழைத்தால்

ஒரு நிமிடம் நின்று

திரும்பிப் பார்க்கிறேன்

ஏமாறப்போவது தெரிந்தும் …

 

நினைவுகள் வரங்கள்

நினைவுகள் வலிகள்

இரண்டுக்கும் மத்தியில் நான்

எதைக் காட்டுவது

என்று தெரியாமல்

கைகளைக் கட்டிக்கொண்டு

வடுக்களோடு …

 

எல்லாம் தான் இருக்கிறது

எல்லாரும் தான் இருக்கிறார்கள்

வைரங்களை வைத்துக்கொண்டு

என்ன செய்யபோகிறது வண்ணத்துப்பூச்சி

வண்ணங்களை நீ எடுத்துச் சென்று விட்ட பிறகு…

 

 

எழுதிய கவிதைகள்

அழிந்து போகலாம்

பேசிய வார்த்தைகள்

கரைந்து போகலாம்

பழகிய நாட்கள்

இறந்து போகலாம்

நட்பு ??

 

போனால் போ

போதும் இந்த விளையாட்டு

முடித்துக்கொள்கிறேன்

என மறக்க நினைக்கிற

ஒவ்வொருமுறையும்

நூறு முறை அதிகமாக

மறுத்து நிற்கிறது என் மனது …

 

அந்த அழகான நாட்களும்

உன் நினைவுகளும்

நம் நட்பின் கதைகளும்

மீண்டும் மீண்டும்

என் நெஞ்சில்

உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்

இது போன்ற மாலை நேரமும்

மழைக்கால நாட்களும்

வந்து போகின்ற வரையினில் …

 

மழை நின்றுவிட்டிருந்தது

தூறல் மட்டும்

நிற்கவில்லை என்னுள் ..

 

Tags:

This entry was posted on Monday, September 1st, 2008 at 7:07 pm and is filed under நட்பினிலே நட்பினிலே, நெடுங்கவிதை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

16 comments so far

Raghurengaraja
 1 

nalla kavithai

September 10th, 2008 at 9:10 am
ரெஜோ
 2 

நன்றி ரகு

September 10th, 2008 at 9:43 pm
Palani
 3 

arputham … mega arumai

September 13th, 2008 at 5:55 am
ரெஜொ
 4 

நன்றி பழனி :-)

September 15th, 2008 at 5:48 pm
bharathimurugan
 5 

நீ ஒரு

மழலைப் பாடகனும் கூட

February 17th, 2009 at 5:30 pm
Rejovasan
 6 

கவித ! கவித !! :-)

February 17th, 2009 at 9:20 pm
Revathi
 7 

தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே
யார் அடிச்சாரோ..யார் அடிச்சாரோ……….

நிஜமாவே..இத படிக்கும் போது அம்புட்டு பீலிங்க்ஸ்-ங்க

June 13th, 2009 at 10:01 pm
ப்ரியசகி
 8 

மழையினில் நனைந்து

கொட்டும் ஒவ்வொரு துளியையும்

குருதியில் குழைத்து

மழையாகிடவே கனவெனக்கு.. சூப்பர் அழகு….தொடர்க….

June 26th, 2009 at 3:49 pm
ப்ரியசகி
 9 

உங்கள் கவிதையில் உள்ள வலி உணர முடிகிறது…. வலியை உணர்ந்தவர்களால் தான் உணர முடியும்… காலம் மாறும்…..

June 26th, 2009 at 3:57 pm
Rejovasan
 10 

காலங்கள் மாறும் வெறும் கனவாகக் கூடும் ..

June 26th, 2009 at 9:40 pm
Arulprakasam
 11 

”மிக நன்று”

July 8th, 2010 at 1:30 am
Shanka Ram.S
 12 

Hi iam shankar ram,

very nice
En life la ena nadakutho athu appadiye ingu iruku ena vithayasum na athu kavithai a iruku…

eன்றும் அங்கிருந்தாய்

நீ மழையே – அன்றும்

நீ அங்கிருந்தாய்…

கனவு போலத்தான் இருக்கிறது

நீ என்னைக் கடந்துபோனது …

July 9th, 2010 at 4:06 am
Rejovasan
 13 

நன்றி ராம் :-)

மழையும் பிரிவும் வலியும் எல்லோருக்கும் பொது போல …

July 9th, 2010 at 12:58 pm
Rejovasan
 14 

நன்றி அருள் :-)

July 9th, 2010 at 12:58 pm
சதீன் பிரியன்
 15 

கோடை காலத்தில் குளிர் மழயில் நனைந்தது உணர்வு…. மீண்டும் நனைய வருவேன்……
நன்றி……..

March 16th, 2011 at 5:52 pm
Rejovasan
 16 

@சதீன் பிரியன்,
மறக்காமல் தங்களது விமர்சனங்களையும் சொல்லுங்கள் :-)

March 17th, 2011 at 1:28 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment