30
Aug

15

   Posted by: Rejovasan   in சுவடுகள்

மே 15 ,2007.

மறக்க முடியாத நாள் .

கடைசி தேர்வெழுதிய நாள் . கல்லூரி வாழ்வின் கடைசி நாள் .

 

அதன் பின் எவ்வோளவோ காட்சிகள் கண்கள் கண்டிருப்பினும் ,கல்லூரி நினைவுகளில் கண்மூடுகையில் எல்லாம் கண்முன்னே விரிகிறது அந்த நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும் .

 

அதன் பின் எவ்வோளவோ ஒலிகளைக் கேட்டிருப்பினும் , இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும் , காகிதங்கள் திருப்பும் சர சரப்பும் , மின் விசிறிகளின் சுழல் சத்தமும் , இதயம் போலவே விட்டு விட்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு குழல் விளக்கின் முணு முணுப்பும் …..

 

எப்பொழுதும் அதிசீக்கிரம் தேர்வறை விட்டு ஓடும் பழக்கம் மறந்து போய் , நடக்க மறந்து போன முடவன் போல இருக்கையில் ஒட்டிக் கொண்டு , அதன் வேகத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் நின்று விடக் கூடாதா என்ற வலி மனதெங்கும் .. சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையின் கடைசி பக்கக்கங்கள் நெருங்கிவிட்டது என்னும் பர பரப்பை மீறிய வேதனை ..

 

எத்தனையோ பேரை பார்த்த நிதானத்தில் , இயல்பாகத் தான் இருந்தது கல்லூரி ..

 

இயல்பு மீறி கல்லூரி முதல் நாள் அணிந்த சட்டையை தேடி அணிந்து , எழுதுபகரணங்கள் சகிதம் வந்து , தேர்வு நேரம் முடிந்த பின்னும் எழுந்து போக மனமின்றி , ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , முதல் நாள் பள்ளி செல்ல அடம் பிடித்து மறுத்த அதே மனம் கடைசி நாள் கல்லூரி விட்டு செல்ல ….

 

அதே குழந்தை மனம் .. எல்லார் முன்னும் அழ வெட்கமில்லை அதற்கு .. நாற்காலியில் பெயர் கிறுக்குவது அநாகரீகம் என்று படவில்லை … அடுத்த வெள்ளையடிப்பில் நிச்சயம் மறைந்து போகும் எனத் தெரிந்தும் சுவர்களில் பெயர் கிறுக்க மறக்கவில்லை ..அத்தனை பேரையும் கையெழுத்தில் அடக்கிவிட முயலும் எண்ணம் முட்டாள் தனமில்லை அதற்கு … வருடுகையில் உயிர் பெற்று நம்மை சுற்றி உலவுவார்கள் என்று அவ்வளவு நம்பிக்கை . இத்தனை நாட்கள் கண்டு கொள்ளப் படாமேயே விடப் பட்ட நாய்க்கு கூடப் பால் அன்று ..

 

வாய் விட்டுக் கதறி அழுத தருணங்கள் நினைத்துப் பார்க்கையில் பின்னொரு நாள் சிரிப்பை வரவழைக்கின்றன . மனம் விட்டு மகிழ்ந்த தருணங்கள் நினைக்கையில் எல்லாம் வரவழைக்கின்றன கண்ணீரை மௌனமாகக் கண்ணோரம் .

 

அன்று அணியப்பட்டிருந்த அத்தனை ஆடைகளின் நிறங்களும் எப்பொழுது பார்த்தாலும் பிரதிபலிக்கின்றன எல்லா ஒளிச்சிதறல்களின் போதும் நிற மாலைகளில் .அன்று பேசப் பட்ட அத்தனை வார்த்தைகளும் பத்திரமாயிருக்கின்றன ரசித்து எழுதப்பட்ட காதல் கவிதைகளென .

 

15 , என் நினைவில் மறக்க முடியாமல் பதிந்து போன எண் . என்னை நான் கண்டெடுத்த இடத்தின் முகவரி திருச்சி - 15 , முதல் வருடத்தில் என்னைப் பதிவு செய்து கொண்ட எண் 1030015 … எனக்கென அடையாளங்களை உருவாக்கித் தந்தது இரு குழுக்கள் . தமிழ் மன்றமும் , துறை சங்கமும் .. அவர்களும் மொத்தம் 15 பேர் .. இன்னும் ….. கடைசி நாளும் கூட .

 

தேதி பார்க்கும் ஒவ்வொருமுறையும் ஓடிவிட்டதா ஒரு வருடம் என பிரமிக்க வைக்கிறது காலத்தின் வேகம் . இருந்து கூட ஏதோ ஒரு நீண்ட விடுமுறைக்கு விட்டு வந்ததாகவும் , அது முடிந்ததும் மீண்டும் கல்லூரி செல்லப் போகிறோம் என்பது போன்ற எண்ணமே அடி மனதில் பாறை கீழ் உறைந்து போன தண்ணீராய் பதிந்து போய் விழிக்கின்ற ஒவ்வொரு காலையும் , முதல் வகுப்பென்ன என எண்ண வைக்கின்றது ..

 

அது சரி எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும் ,முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும் , மிதிவண்டி பழகி வாங்கி வந்த தழும்பும் , பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும் , முதல் எதிர்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும் , சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும் , எல்லாம் சேர்ந்த கல்லூரி நினைவுகளும் யாருக்குத் தான் மறக்கும் …..

Tags:

This entry was posted on Saturday, August 30th, 2008 at 1:52 pm and is filed under சுவடுகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments so far

Yogalakshmi
 1 

Great..It got my emotion..

September 2nd, 2008 at 9:54 am
ரெஜோ
 2 

வருகைக்கு நன்றி யோகா :-) தொடர்ந்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளவும் :-)

September 2nd, 2008 at 3:43 pm
ANAND R
 3 

“இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும்” - சபாஷ் டா…

December 18th, 2008 at 10:43 pm
Rejovasan
 4 

நன்றி அண்ணா :-)

December 19th, 2008 at 8:58 am
ARULPRAKASAM
 5 

படிக்க படிக்க பதிகிறது ஒவ்வொரு வார்த்தையும் ஆழமாய் மனதில்

June 27th, 2010 at 11:48 pm
Rejovasan
 6 

நன்றி அருள் :-) தொடர்ந்து வருகை தரவும்

June 28th, 2010 at 1:16 pm

Leave a reply

Name (*)
Mail (will not be published) (*)
URI
Comment